எளிமையான தெற்கத்தி வாய்மொழிப் பிரயோகத்தோடு கவிதை ததும்பும் விவரணைகள், பெண்களின் ஆழ்மன உணர்வை பிரதிபலிக்கும் சொல்லாடல்கள். குடும்ப அமைப்பில் உறவுகளுக்குள் சிக்கல் முகிழ்க்க, தடம் தவறிய பாலுணர்வே பெரும்பாலும் காரணமாகிறது. ஆனால் அது ஆண்களின் தவறாக இருந்தாலும் பெரும்பாலும் அல்லலுறுபவர்கள் மட்டுமல்லாமல் தங்களது வாழ்வையும் உயிரையும் பறிகொடுப்பவர்கள் என்னமோ பெண்கள்தான். பெண்களின் மன உணவுர்களை இந்த அளவிற்கு எளிமையாகவும் தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். எந்தவிதமான குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி யாவரும் வாசிக்கும் நடையில் வந்திருக்கும் இப்புதினம் படைப்புலகத்தில் ஒரு நல்ல அறிகுறி.