அஜ்னபி
அரபு நாடுகளில் பிழைக்கப்போகிற இஸ்லாமியச் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுப்பூர்வமான ஆவணம்.
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய வயதில் கல்வி கற்க முடியாமல் குடும்பத்தைப் பிரிகிறார்கள். வீட்டில் நிகழ்கிற எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட அயல்தேசத்தில் உழைக்கிறார்கள். சகோதரியின் திருமணம் ஒளிநாடாவில் வரும். விரும்பும்போதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயித்த பெண்ணின் நிழற்படம் அஞ்சலில் வரும். தனிமையில் அதனுடன் பேசிக்கொள்ளலாம். மரணமும் செய்தியாக வரும். தனியறையில் அழுதுகொள்ளலாம். அரபு நாடுகளில் பிழைக்கப்போகிற இஸ்லாமியச் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான ஆவணம். சர்வதேசத் திரைப்படத்தின் கூறுகளோடு இது பொருந்திப் போவதற்கான காரணம் இதன் யதார்த்தம். அங்கதமும் நகைச்சுவையும் சேர்ந்து நுட்பமான அரசியல் பார்வையுடன் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலைச் சமீபத்தில் தமிழில் நிகழ்ந்த முக்கியமான பதிவு என்று சொல்லலாம்.