இயற்கையின் மீது, அதன் பரிமாணங்கள் மீது, மனிதர்களின் மீது அஜயன்பாலாவுக்கு அப்பழுக்கற்ற பரவசம் உண்டு. இயல்பில் இது இவருக்குச் சிறகுகள் போல. ஒரு இலைச் சருகிற்கோ, அல்லது ஒரு திராட்சைக் கொத்திற்கோஈ அல்லது ஒரு சிறுமியின் பின்னலில் உள்ள பூவிற்கோ, இவரைத் தொலை தூரத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. அது போன்ற தொடர் பயணங்களில்தான் அறியாத பல இடங்கள் நகர்ந்து வந்து தாமாகவே இவருக்குத் தங்களை இனங் காட்டிக் கொள்கின்றன. எதனினும் அரிதைக் கிரகிக்கும் இந்த சுபாவத்தால்தான், இன்னும் அவரது கதைகளின் நிகழ்ச்சிகள் பலவும், இரயில் பயணச் சன்னலோரம் எதிர்பாராத நேரத்ததில் விளைநிலம் கடந்து செல்வதுபோல, அடிக்கடி என் மனதில் பசேலென்று தவிக்கின்றன.
வாழும் கதைகள் இவை. அனுபவத் துளைப்பிலிருந்து பொங்கும் மனச்சுனைகள். இவற்றிலிருந்து பெருகும் உதிரமும் உற்ற நிறங்களும்அடிச் சுவடுகளாக இவர் நடைவெளியெங்கும் பதிகின்றன. சற்று உயரத்திலிருந்து பார்க்கும் போத, நடந்த இடங;களிலிருந்தெல்லாம் ஓவியங்கள் மேலெழுந்து வருகின்றன. சற்றும் ஒப்பனையற்ற, எதையும் வலிந்தேற்கும் துருத்தலற்ற, மனப்பூர்வத்தில் சுடர்விடுபவை. அஜயன்பாலாவின் கதைகள் மீதில் எனக்கொரு இலக்கியக் கிரக்கம் உண்டு. அவற்றை முன்பு நான் ரகசியமாக உச்சி முகர்ந்து சிலாகித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
- யூமா வாசுகி