கஸ்தூரி சுதாகர் வெற்றியடைவது இங்கே தான். அறிவியல், அதுவும் போகிற போக்கில் மட்டும் கம்ப்யூட்டர் வர, வேதியியலும், உயிப்பியலும் முக்கியமாகக் கலந்து களன் அமைத்துத் தர, சீரான வேகத்தில் ஏவுகணை போல் முன்னேறுகிற அறிவியல் கதை. அறிவியலைத் தொட்டுக் கோடி காட்டியபடி கதையை முன்னேற்றிக் கொண்டு போகும் மொழிநடை, லாவகம் -எல்லாம் கை வந்திருக்கிறது சுதாகருக்கு.
7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும் போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லீல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் படிக்கும்போதே மெல்ல மெல்ல அந்த பிரமிப்புக்கு ஆளாவதும் திரும்ப வாசிக்க விழைவதும் மிக இயல்பானதே.
”ஆதியில் ஒரு சொல்லிலிருந்தது .விஷ்ணுபுரம் என்றதற்கு பெயர். வித்யா, விஷ்ணுபுரம் படித்திருக்கிறாயா.?
படிமங்கள் அலையலையாய் ஆர்த்தெழுந்து மோத அதில் முழுக்க நனைந்திருக்கிறாயா.?
கோணங்கி புரியுமா வித்யா உனக்கு.? ஓடும் பஸ்ஸில் லா.ச.ரா. படித்ததுண்டா.? XYZ-னின் படிமங்களும், மாஜிக்கல் ரியலியஸமும் ப்ரக்ஞையை அழுத்த, நனவும் கனவுமற்ற வெளியில் நீந்தும்போது
’டிக்கெட்’ என்ற சொல்லும் கண்டக்டர் கைச் சொடுக்கும் நீந்தும்
காலைப் பிடித்திழுக்க, என்ன ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுக்கணும் என்பது நினைவுக்கு வராமல் மலங்க விழித்து, பக்கத்திலிருப்பவனின் நமட்டுச் சிரிப்பில் வெட்கியிருக்கிறாயா.?”
சுதாகரின் நாவலில் வருகிர பத்தி இது.
அறிவியல் புனைகதையில் தட்டுப்படும் இப்படியான இலக்கிய விசாரத்தை ஆங்கில ஸைஃபியில் கூடப் பார்த்ததில்லை.
சுஜாதா இருந்திருந்தால் ரசித்திருப்பார் .
-இரா.முருகன்